சிறுவயதில் அப்பா சாப்பிட உட்காரும்போது, அம்மா கையில் இருபது காசு கொடுத்து அப்பாவுக்கு மட்டை ஊறுகாய் ஒன்னு வாங்கிட்டு ஓடியாடா என்பார். வெகு நாட்களாக வாங்கி தந்தாலும், முதல் முறை அதை சுவைத்த அனுபவம் மறக்கமுடியாத ஒன்று!! இருபது வருடங்களுக்கு முன்பு எல்லாம் அம்மா வீட்டில் செய்து பீங்கான் ஜாடியில் எலுமிச்சை ஊறுகாய் போட்டு வைத்து இருப்பார், இல்லையென்றால் கடையில் இப்படி மட்டையாக கிடைக்கும். இன்று போல, பாட்டில், பாட்டிலாக வாங்கி அடுக்கி கொள்வதில்லை. இது காய்ந்த தாமரை இலையோ இல்லை மந்தாரை இலையாகவோ இருக்கும். அதை சுற்றி அந்த ஊறுகா கம்பனியின் பெயர்..... அன்று பத்து காசுக்கு கிடைக்கும், அம்மா கொடுத்ததில் மீதி எதுவும் வந்தால் அதை நொறுக்கு தீனியாக வாங்கி தின்றுக்கொண்டே வந்து அந்த ஊறுகாய் மட்டையை கொடுப்போம் ! அந்த இலையை மடிக்கும் விதத்தை கவனித்து இருக்கிறீர்களா, கையில்தான் மடித்து இருப்பார்கள் ஆனால் எந்த ஒரு ஊறுகாய் பாக்கெட்டும் ஒன்று போல இருக்கும். கொஞ்சம் பிரிக்க ஆரம்பிக்கும் போதே அந்த வாசனை உங்களது நாசியினை தூண்டும். இன்றைய ஊறுகாய் பாட்டிலில் எண்ணையும் மிதந்துக்கொண்டு இருக்கும், இதனால் ஊறுகாய் கொஞ்சம் எடுத்து வைக்கும்போதே தட்டில் ஓடும்..... ஆனால் இந்த வகை ஊறுகாய்களில் எண்ணை என்பது பெயரளவுக்குதான், ஊறுகாய் என்பது கெட்டியாக இருக்கும். சிறு சிறு துண்டுகளாக நார்தங்காயும் அல்லது எலுமிச்சை பலமும் போட்டு, அதில் காரப்பொடியும் உப்பும் தூவி, மஞ்சளும் புளியும் சேர்த்து, கடுகும் எண்ணையும் கொண்டு தாளித்து அது ஊற வைத்து இப்படி வரும்போது....... ஆள் காட்டி விரலால் பட்டும் படாமல் தொட்டு, நுனி நாக்கில் வைத்து அதன் சுவை கொஞ்சம் கொஞ்சமாக பரவி மூளைக்கு உரைக்கும்போது, எச்சில் எல்லாம் ஒன்று சேர்ந்து வாய்க்குள் நயாகரா அருவியை உண்டு பண்ண, சட்டென்று ஒரு வாய் சாதத்தை வாயில் வைத்து பின்னர் சாதத்தின் சுவையும், ஊறுகாயின் சுவையும் என்று மாறி மாறி வரும்போது அன்றைய உணவு இவ்வளவு சுவையா என்று தோன்றுமளவுக்கு இருக்கும் . எங்கேனும் செல்லும்போது மட்டை ஊறுகாய் கிடைத்தால், நுனி விரலில் தொட்டு நாக்கில் வைத்து பாருங்கள்...